சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் கிராமத்திற்குள் புகுந்த மர்ம கும்பல், ஆதிதிராவிடர் மக்கள் மீது அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடந்த வெடிகுண்டு வீச்சு மற்றும் தாக்குதல் சம்பவத்தின் வடு மறைவதற்குள்ளேயே, மீண்டும் ஒரு கிராமத்திற்குள் புகுந்து இத்தகைய கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது திமுக அரசு முறையான நடவடிக்கை எடுக்காததே, இது போன்ற கும்பல்கள் ஊருக்குள் புகுந்து தாக்கும் அளவிற்குத் துணிச்சலைப் பெற்றுள்ளதாகத் தினகரன் விமர்சித்துள்ளார்.
மக்களின் பாதுகாப்பில் அக்கறை காட்டாமல், அடுத்த தேர்தலுக்கான விளம்பரப் பணிகளில் மட்டுமே திமுக மும்முரமாக இருப்பதாகக் கூறியுள்ள அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வரலாற்றுத் தோல்வியைச் சந்திப்பது உறுதி என்றும் எச்சரித்துள்ளார்.
மானாமதுரை தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாகக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
