தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பில் பங்கேற்கச் சென்ற அக்கட்சியின் தலைவர் விஜய்யின் வாகனத்தை, ரசிகர்கள் உற்சாக மிகுதியால் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்தபோது எதிர்பாராத விதமாகப் பெரும் விபத்து ஏற்பட்டது.

திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் அருண் ஆகியோர் விஜய்யின் காருக்கு அருகில் செல்ல முயன்றபோது நிலைதடுமாறி விழுந்தனர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த மாணவர் விக்னேஷ், தற்போது திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் விஜய்க்கு காட்டமான அறிவுரை வழங்கியுள்ளார். ஏற்கனவே கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகத்தை சுட்டிக்காட்டிய அவர், தவெக நிகழ்ச்சிகளில் முறையான திட்டமிடலோ அல்லது பாதுகாப்பு நடவடிக்கைகளோ இல்லை என்று விமர்சித்துள்ளார்.

தனது ரசிகர்களையும் தொண்டர்களையும் உளவியல் ரீதியாகப் பக்குவப்படுத்த வேண்டும் என்றும், அவர்கள் பொது அமைதிக்கு ஊறு விளைவிக்காத வகையில் விஜய் அறிவுரை வழங்க வேண்டும் என்றும் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.