ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் பதற்றமான சூழலால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக, உலகின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் கட்டுப்படுத்த முயன்றால், அது இந்தியாவின் எரிபொருள் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக அமையும்.

தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, இந்தியாவிற்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு சுமார் 10 நாட்களுக்கு மட்டுமே உள்ளது. மேலும், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களின் கையிருப்பு அடுத்த 5 முதல் 7 நாட்களுக்குத் தேவையான அளவு மட்டுமே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தச் சூழலைக் கையாள இந்திய அரசு போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 45 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே இறக்குமதி செய்யப்படுவதால், விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் மாற்று வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பொதுமக்கள் தேவையற்ற பீதியடைந்து எரிபொருட்களை மொத்தமாகச் சேமிக்க வேண்டாம் என்றும், தற்போதைக்குத் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் இல்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அரசியல் நகர்வுகளை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருவதோடு, எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான கையிருப்புகளை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.