ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரபல இயக்குனர் பாலா, இயக்குனர் விஜய் குறித்து நெகிழ்ச்சியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த விழாவில் பேசிய இயக்குனர் பாலா, “இயக்குனர் விஜய்க்கு நான் குரு கிடையாது, உண்மையில் அவர்தான் எனக்கு குரு. ஒரு தொழிலில் எவ்வளவு கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை நான் அவரிடமிருந்து தான் கற்றுக்கொண்டேன். அவர் எனக்கு ஜூனியராக இருக்கலாம், ஆனால் உழைப்பைப் பொறுத்தவரை அவரே எனக்கு முன்னுதாரணம்,” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், விஜய் எனக்கு ஒரு ‘தாயுமானவன்’. எனது இன்ப துன்பங்கள் அனைத்திலும் ஒரு உடன்பிறப்பாகவும், தாய் தந்தையாகவும் நின்று என்னைப் பார்த்துக் கொள்கிறார். நான் நலமாக இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார், அவர் நலமாக இருக்க வேண்டும் என்று நான் வேண்டுகிறேன்,” என உருக்கமாகத் தெரிவித்தார்.

இவ்விழாவில் படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படம் வரும் மார்ச் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.