தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், அவரைப் பற்றிச் சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும் இழிவாகவும் பதிவிடும் தவெக தொண்டர்களுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஒரு பெண் தனது திருமண வாழ்க்கை குறித்து எடுக்கும் முடிவு அவரது தனிப்பட்ட உரிமை என்றும், அதை ஆணாதிக்க மனநிலையோடு கேலி செய்வதும் டிஜிட்டல் வன்முறையில் ஈடுபடுவதும் ஏற்புடையதல்ல என்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

விஜய்யின் பெயரைப் பயன்படுத்தியே இத்தகைய அவதூறுகள் பரப்பப்படுவதால், இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய சமூகப் பொறுப்பு ஒரு கட்சித் தலைவராக விஜய்க்கு உண்டு என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தன்னைப் பற்றிப் பரவும் இழிவான பதிவுகளைக் கண்டும் விஜய் மௌனம் காப்பது, அந்தச் செயல்களுக்கு அவர் மறைமுகமாகத் தரும் ஒப்புதலாகவே கருதப்படும் என மாதர் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

எனவே, சங்கீதா மீது அவதூறு பரப்புபவர்கள் மீது காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனது தொண்டர்களின் இத்தகைய போக்கைக் கண்டித்து விஜய் பகிரங்கமாக அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அந்தச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

பெண்களின் கௌரவத்தையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் அரசியல் பொழுதுபோக்கு விவாதமாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது என்றும் அந்த அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.