ஈரானின் உயர்மட்டத் தலைவரும், ஷியா முஸ்லிம்களின் ஆன்மிகத் தலைவருமான அயதுல்லா அலி காமேனியின் மறைவுக்கு உலகம் முழுவதும் கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. மேற்கத்திய நாடுகள் மற்றும் ஈரானின் அண்டை நாடுகள் இதனை வரவேற்றாலும், பல இடங்களில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. குறிப்பாக, அதிக அளவிலான ஷியா மக்கள் வசிக்கும் பகுதிகளில் வலுவான எதிர்வினைகள் பதிவாகியுள்ளன.

காமேனியின் மறைவுச் செய்தி பரவியதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கான ஷியா சமூகத்தினர் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். லக்னோ, ஸ்ரீநகர், தில்லி மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பேரணிகள் நடத்தப்பட்டன.

இந்தப் போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தின்போது, ஒரு ஊடகவியலாளர் மற்றும் இரண்டு சிறுவர்களுக்கு இடையேயான உரையாடல் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளமான ‘X’-ல் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிறுவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அதாவது பிரதமர் மோடி இஸ்ரேலுக்குச் சென்று வெடிகுண்டுகளை வழங்கியதாகவும், அதனால்தான் ஈரான் அழிக்கப்பட்டதாகவும் சிறுவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். காமேனி ஈரானில் இருந்தாலும், அவர் தங்களுடைய தலைவர்/பாதுகாவலர் என்றும், தூரத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் 11 வயது சிறுவன் தெரிவித்தான்.

இந்த வயதிலேயே சிறுவர்கள் இத்தகைய தீவிரமான கருத்துக்களுடன் போராட்டங்களில் ஈடுபடுத்தப்படுவது குறித்து இணையவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர். பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குத் தவறான தகவல்களைக் கொடுத்து வளர்ப்பதாகப் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஒரே சீரான கல்வித் திட்டம் மற்றும் மதராசாக்களை அரசுப் பள்ளிகளாக மாற்றுவது குறித்து வலியுறுத்தல்களும் எழுந்துள்ளன.