பெங்களூருவில் வீடு வாடகைக்கு எடுப்பதிலும், அதற்கான முன்பணம் திரும்புவதிலும் நிலவும் சிக்கல்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விவாதப் பொருளாகி வருகின்றன. தற்போது, வீட்டை காலி செய்த வாடகைதாரர் ஒருவரின் முன்பணத்திலிருந்து, பெயிண்டிங் மற்றும் சுத்தம் செய்வதற்காக உரிமையாளர் ரூ.51,000-க்கும் அதிகமாக பிடித்தம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலை மற்றும் கல்வி நிமித்தமாக பெங்களூருவுக்கு வரும் ஆயிரக்கணக்கானோர், வீடு தேடும்போது செக்யூரிட்டி டெபாசிட் என்ற பெயரில் பெரிய தொகையைச் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். பல நேரங்களில், வீட்டை காலி செய்யும்போது காரணங்கள் சொல்லப்பட்டு இந்தத் தொகை திருப்பித் தரப்படுவதில்லை. முன்னதாக, இதுபோன்ற ஆன்லைன் புரோக்கர் மோசடிகள் குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா எச்சரிக்கை விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பெங்களூருவில் வசித்து வந்த வாடகைதாரர் ஒருவர் வீட்டை காலி செய்யும்போது, உரிமையாளர் பெயிண்டிங் மற்றும் சுத்தம் செய்யச் சொல்லி அட்வான்ஸ் தொகையில் பெரும் பகுதியை எடுத்துக்கொண்டுள்ளார்.
இது குறித்து அந்த நபர் பதிவிட்டுள்ளதாவது, உரிமையாளரிடம் சாவியை ஒப்படைக்கும் முன் பெயிண்ட் அடிக்கக் கண்டிஷன் போடப்பட்டது. பெயிண்டர் ரூ.20,000-க்குள் ஆகும் என்று கூறிய நிலையில், உரிமையாளர் நேரடியாகப் பேசி ரூ.36,000 ஆக உயர்த்தியுள்ளார்.
வீடு சுத்தம் செய்வதற்கு ரூ.10,000 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் 3BHK பிளாட்டிற்கு இதற்கு அதிகபட்சம் ரூ.5,000 மட்டுமே செலவாகும் நிலையில், இந்தத் தொகை மிக அதிகம் என வாடகைதாரர் குறிப்பிட்டுள்ளார். மீதமுள்ள ரூ.5,000 டெபாசிட் பணத்தை, புதிய வாடகைதாரர் குடியேறி 2 வாரங்களுக்குப் பிறகு ஏதேனும் சேதம் உள்ளதா என்று பார்த்துவிட்டுத் தருவதாக உரிமையாளர் கூறியுள்ளார்.
முன்னறிவிப்பின்றி அட்வான்ஸ் பணத்திலிருந்து பெரிய தொகையைப் பிடித்ததால் தான் மிகவும் வருத்தமடைந்ததாக அந்த நபர் தெரிவித்துள்ளார். இந்த அனுபவத்தைப் பார்த்த இணையவாசிகள், பெருநகரங்களில் வாடகைக்கு வீடு எடுத்து வசிப்பதை விட, அந்தத் தொகையை EMI-ஆகக் கட்டி சொந்த வீடு வாங்குவதே சிறந்தது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
