தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் பலரும் இன்று காலையிலேயே தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். குறிப்பாக, பிரதமர் மோடி எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டதோடு மட்டுமல்லாமல், தொலைபேசி வாயிலாகவும் முதல்வரைத் தொடர்பு கொண்டு நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துக் கூறினார். அரசியல் ரீதியாக எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும், முதல்வரின் பிறந்தநாளில் பிரதமர் காட்டிய இந்த ஆர்வம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
மறுபுறம், முதல்வரின் மிக நெருங்கிய நண்பராகவும், ‘சகோதரர்’ என்றும் அழைக்கப்படும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இன்று மதியம் 1 மணி வரை சமூக வலைதளங்களில் எவ்வித வாழ்த்தையும் தெரிவிக்காதது திமுகவினர் மற்றும் அரசியல் நோக்கர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாகத் தனது ‘எக்ஸ்’ பதிவுகளில் ஸ்டாலினைத் தொடர்ந்து ஆதரித்துப் பேசும் ராகுலின் இந்தத் தாமதம், கூட்டணிக்குள் ஏதேனும் மனக்கசப்பா அல்லது வேறு ஏதேனும் முக்கியக் காரணங்கள் இருக்கிறதா என்ற விவாதத்தைத் தூண்டியுள்ளது. இருப்பினும், மல்லிகார்ஜுன கார்கே போன்ற மூத்த தலைவர்கள் வாழ்த்துக் கூறியிருப்பதால், ராகுல் காந்தி பின்னர் தனது வாழ்த்தைப் பதிவு செய்வார் அல்லது நேரடியாகத் தொடர்பு கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
