டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரை டெல்லி சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை விடுவித்தது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அரசியல் சவால் விடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்க சிறப்பு நீதிபதி ஜித்தேந்திர சிங் மறுத்துவிட்டார். “இந்தக் கொள்கைக்கு பின்னால் எந்தவிதமான கிரிமினல் சதியோ அல்லது உள்நோக்கமோ இருந்ததற்கான ஆதாரங்களை சிபிஐ சமர்ப்பிக்கவில்லை. இந்த வழக்கு வெறும் யூகங்களின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது; விசாரணைக்கு உகந்ததல்ல” என்று நீதிபதி தனது தீர்ப்பில் கடுமையாகக் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: “டெல்லியில் உடனடியாக தேர்தலை நடத்துமாறு பிரதமர் மோடிக்கு நான் சவால் விடுகிறேன். ஒருவேளை அந்தத் தேர்தலில் பாஜக 10 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுவிட்டால், நான் அரசியலை விட்டே விலகிவிடுகிறேன். அந்த அளவுக்கு எங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எங்களை முடக்க சதி செய்தனர். இந்த வழக்கை முற்றிலும் போலியானது என நீதிமன்றமே கூறிவிட்டது. இதற்காக நாட்டு மக்களிடம் அவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும். நாங்கள்உண்மையான நேர்மையாளர்கள் என்பதை இந்தத் தீர்ப்பு நிரூபித்துள்ளது,” என்றார்.
மேலும் டெல்லியின் தற்போதைய நிலைக்கு பாஜகவே காரணம் எனச் சாடிய கெஜ்ரிவால், “யமுனை நதி மாசுபட்டதற்கும், டெல்லியின் சாலைகள் சேதமடைந்ததற்கும் பாஜகவின் முட்டுக்கட்டைகளே காரணம். டெல்லியை அவர்கள் குழப்பத்தில் தள்ளிவிட்டனர்” என்று குற்றம் சாட்டினார். நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு, ஆம் ஆத்மி கட்சிக்கு மிகப் பெரிய அரசியல் வெற்றியாகக் கருதப்படுகிறது.
