அரியானா மாநிலத்தில் நேபாளத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவரை, ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குருக்ஷேத்திராவில் பணிபுரியும் அந்தப் பெண், தனது தோழியைப் பார்க்க குருகிராம் வந்தபோது அவரைச் சந்திக்க முடியாமல் போனதால், மது அருந்தச் சென்றுள்ளார்.
பின்னர் வீடு திரும்புவதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறியபோது, போதையில் இருந்த அந்தப் பெண்ணின் நிலையைக் கவனித்த ஆட்டோ ஓட்டுநரும், அவருடன் இருந்த இரண்டு நண்பர்களும் சேர்ந்து, அவரை நஹர்பூர் ரூபா பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு அறைக்குக்கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மறுநாள் காலை சுயநினைவுக்கு வந்த அந்தப் பெண், தான் பாதிக்கப்பட்டதை உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி முக்கியக் குற்றவாளியான ஆட்டோ ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.
மேலும், தலைமறைவாக உள்ள மற்ற இரண்டு குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
