தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளும் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர். பாலு தலைமையிலான திமுக உயர்மட்டக் குழு, ஏற்கனவே மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தையை முடித்துள்ள நிலையில், தற்போது அனைவரது கவனமும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) பக்கம் திரும்பியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு வரை தங்களுக்கு அழைப்பு வரவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மார்ச் 2-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு திமுக முறைப்படி அழைப்பு விடுத்துள்ளது. இம்முறை மநீம மற்றும் தேமுதிக ஆகிய புதிய வரவுகளால் கூட்டணிக் கணக்குகள் மாறியுள்ள சூழலில், விசிக எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைக்குமா அல்லது சமரசங்கள் செய்யப்படுமா என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
