தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை (Rajya Sabha) இடங்களுக்கான தேர்தல் களம் நேற்று முதல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தம்பிதுரை, ஜி.கே. வாசன், திருச்சி சிவா உள்ளிட்ட 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் முடிவடைவதைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் இதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. மார்ச் 5-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும், போட்டி இருக்கும் பட்சத்தில் மார்ச் 16-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே, ‘தேர்தல் மன்னன்’ என்று அழைக்கப்படும் பத்மராஜன் வழக்கம் போல தனது அதிரடி என்ட்ரியைக் கொடுத்து நேற்று முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதுவரை 251 தேர்தல்களில் போட்டியிட்டுள்ள அவர், இன்று தனது 252-வது வேட்புமனுவைத் தாக்கல் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற ஒற்றை லட்சியத்தோடு, தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து களமிறங்கும் இவரது முயற்சி தலைமைச் செயலக வட்டாரத்தில் இன்று பேசுபொருளாகியுள்ளது.
