2026 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் தத்தளித்து வந்த இந்திய இளம் வீரர் அபிஷேக் ஷர்மா, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான வாழ்வா-சாவா (Must-win) போட்டியில் தனது பழைய ஃபார்முக்குத் திரும்பியுள்ளார். தொடக்க வீரராகக் களமிறங்கிய அவர், சஞ்சு சாம்சனுடன் இணைந்து ஜிம்பாப்வே பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். குறிப்பாக, டினோடெண்டா மாபோசா வீசிய பந்தை அவர் லாங்-ஆன் திசையில் ‘கிளாசிக்’ சிக்ஸராக மாற்றியபோது, டக் அவுட்டில் இருந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டியது ரசிகர்களை நெகிழ வைத்தது.

​இந்த முக்கியமான போட்டியில் சஞ்சு சாம்சன் இரண்டாவது பந்திலேயே சிக்ஸர் அடித்து அதிரடியைத் தொடங்கி வைக்க, அபிஷேக் ஷர்மா தன் பங்கிற்கு இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு ஒரு பிரம்மாண்டமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். அபிஷேக்கின் இந்த மீண்டெழுதல் இந்திய அணியின் உலகக்கோப்பை கனவுக்குப் பெரும் பலம் சேர்த்துள்ளது.