அண்டார்டிகாவின் மெக்முர்டோ உலர் பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ள டெய்லர் பனிப்பாறையிலிருந்து ரத்தம் போன்ற சிவப்பு நிறத்தில் நீர் கொட்டுவது பல தசாப்தங்களாக ஒரு மர்மமாகவே இருந்தது. 1911-ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த “இரத்த நீர்வீழ்ச்சிக்கு” ஆரம்பத்தில் பாசிகளே காரணம் என்று கருதப்பட்டது.
ஆனால், நவீன ஆராய்ச்சியின் படி, பனிப்பாறைக்கு அடியில் சுமார் 1,300 அடி ஆழத்தில் இரண்டு மில்லியன் ஆண்டுகளாக மூடியிருக்கும் ஒரு உப்பு நீர் ஏரி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நீரில் இரும்புச் சத்து மிக அதிகமாக உள்ளது. பனிக்கட்டி பிளவுகளின் வழியாக இந்த நீர் வெளியே வந்து காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் சேரும்போது, இரும்புத்தாது துருப்பிடித்து நீரை அடர் சிவப்பு நிறமாக மாற்றுகிறது.
இது ஆப்பிள் வெட்டப்பட்ட பிறகு காற்றில் பட்டு நிறம் மாறுவது போன்ற ஒரு எளிய வேதியியல் மாற்றமே தவிர வேறில்லை.இந்த நீர்வீழ்ச்சி வெறும் இயற்கை அதிசயம் மட்டுமல்ல, விண்வெளி அறிவியலுக்கும் ஒரு முக்கிய வழிகாட்டியாகும். சூரிய ஒளி மற்றும் ஆக்ஸிஜன் இல்லாத, கடும் உறைபனி மற்றும் அதிக உப்புத்தன்மை கொண்ட இந்த ஏரிக்குள் இப்போதும் நுண்ணுயிரிகள் உயிர்வாழ்வது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பூமியின் இவ்வளவு கடினமான சூழலில் உயிர்கள் செழிக்க முடியுமென்றால், செவ்வாய் கிரகம் அல்லது வியாழனின் நிலவானயூரோபாவிலும் இதே போன்ற நிலத்தடி நீர்நிலைகளில் உயிர்கள் இருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
எனவே, இந்த இரத்த நீர்வீழ்ச்சி வேற்று கிரகங்களில் உயிர்களைத் தேடும் மனிதனின் முயற்சிக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
