நவீன காலத்தில் மூச்சு விடுவதைப் போலவே போனைப் பார்ப்பதும் ஒரு அனிச்சை செயலாக மாறிவிட்டது. ஒரு நாளைக்கு 110 முறைக்கும் மேலாகத் தேவையில்லாமல் போனைச் சோதிப்பது உங்கள் மூளையின் கவனிக்கும் திறனை மெல்ல மெல்ல அழித்துவிடும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன. நாம் அடிக்கடி போனைப் பார்க்கும் போதெல்லாம், அந்த நேரத்தில் செய்து கொண்டிருக்கும் வேலையை மூளை பாதியிலேயே நிறுத்திவிட்டு, மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டியிருக்கிறது. இந்தத் தொடர் மாற்றங்கள் மூளையைச் சீக்கிரமே சோர்வடையச் செய்து, எதிலும் நீண்ட நேரம் கவனம் செலுத்த முடியாமல் ஒருவிதப் பதற்றத்தை உண்டாக்கிவிடுகிறது.

​ஒரு நாளைக்கு 50 முதல் 80 முறை போனைப் பார்ப்பது இயல்பானது என்றாலும், 100 முறையைத் தாண்டும்போது அது ஒரு தீவிரப் பழக்கமாக மாறிவிடுகிறது. இதிலிருந்து தப்பிக்கத் தேவையற்ற நோட்டிஃபிகேஷன்களை அணைத்து வைப்பதோடு, குறிப்பிட்ட நேர இடைவெளியில் மட்டும் போனைப் பயன்படுத்தும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யாமல், ஒரு வேலையில் மட்டும் 20 முதல் 50 நிமிடங்கள் வரை முழு கவனம் செலுத்துவதும், இரவு நேரத்தில் போனைத் தவிர்த்து ஆழ்ந்த உறக்கத்தைப் பெறுவதும் உங்கள் நினைவாற்றலையும் கவனிக்கும் திறனையும் மீண்டும் மீட்டெடுக்க உதவும்.