உத்தரப் பிரதேசத்தில் ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதலால், தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளைப் பிரிந்து காதலனை ஒரு பெண் கரம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் சஹரான்பூர் பகுதியைச் சேர்ந்த பீரு என்பவருக்கும், முஜாபர் நகரைச் சேர்ந்த சோனி (23) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இல்லத்தரசியான சோனி, அடிக்கடி சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் மூழ்கி இருந்துள்ளார். அப்போது ஹரீஷ் (21) என்ற இளைஞருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகம் நாளடைவில் தீவிர காதலாக மாறியது.
காதல் மோகத்தால் சோனி தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு, மூன்று முறை காதலனைத் தேடிச் சென்றுள்ளார். ஒவ்வொரு முறையும் காதலன் அவரைச் சமாதானப்படுத்தி கணவர் வீட்டிற்கே திருப்பி அனுப்பியுள்ளார். ஆனால், நான்காவது முறையாகக் காதலனைத் தேடிச் சென்ற சோனி, இம்முறை கணவர் வீட்டிற்குச் செல்லப் போவதில்லை என்பதில் பிடிவாதமாக இருந்துள்ளார்.
இந்தப் பிரச்னை காவல் நிலையம் வரை சென்றது. போலீஸார் முன்னிலையில் இரு குடும்பத்தினரும் சுமார் 4 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு முடிவெடுக்குமாறு உறவினர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும், சோனி தனது முடிவில் உறுதியாக இருந்தார். தான் காதலனுடன் மட்டுமே வாழ்வேன் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மனைவியின் பிடிவாதத்தைக் கண்ட கணவர் பீரு, “என்னுடன் வாழ்வதில் அவருக்கு மகிழ்ச்சி இல்லையென்றால், அவர் விருப்பப்படியே தான் விரும்பும் நபருடனேயே வாழட்டும்” எனத் தெரிவித்துவிட்டார். மேலும், தனது இரண்டு குழந்தைகளையும் தானே வளர்த்துக் கொள்வதாகவும் அவர் உறுதியளித்தார்.
இதையடுத்து, இருவரிடமும் போலீஸார் எழுத்துப்பூர்வமான வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தனர். அன்று மாலையே சோனி அருகில் உள்ள ஒரு கோயிலில் தனது ஃபேஸ்புக் காதலன் ஹரீஷைத் திருமணம் செய்துகொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
