குஜராத் அரசு தனது 2006-ஆம் ஆண்டு திருமணப் பதிவுச் சட்டத்தில் (Gujarat Registration of Marriages Act) கொண்டுவரத் திட்டமிட்டுள்ள புதிய திருத்தம், இந்திய அளவில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதன்படி, இனி காதல் திருமணங்களைச் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யும்போது மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இரு தரப்பு பெற்றோரின் அனுமதி அல்லது சான்றிதழ் கட்டாயம் என முன்மொழியப்பட்டுள்ளது. இதனை அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி சட்டசபையில் அறிவித்துள்ளார்.
இந்தத் திருத்தத்தின்படி, திருமணத்திற்கு விண்ணப்பிக்கும்போதே பெற்றோரின் ஆதார் எண் மற்றும் முகவரி விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் கிடைத்த 10 நாட்களுக்குள் உதவிப் பதிவாளர் சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்கு அதிகாரப்பூர்வ நோட்டீஸ் அனுப்புவார். மேலும், திருமணப் பதிவு நடைமுறை முடிய இனி 30 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். “லவ் ஜிகாத்” போன்ற விவகாரங்களைத் தடுக்கவும், பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கவும், சனாதன தர்மத்தின் விழுமியங்களைக் காக்கவும் இந்த நடவடிக்கை அவசியம் என அரசுத் தரப்பில் வாதிடப்படுகிறது.
