தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினர் தங்களின் அரசியல் நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சென்னை இல்லத்தில் முக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்துப் பேசினர்.

மேலும் இச்சந்திப்பின் போது, வரவிருக்கும் தேர்தலில் அதிமுகவிற்குத் தங்களது முழுமையான ஆதரவை வழங்குவதாக அவர்கள் உறுதி அளித்தனர். இந்த ஆதரவு திரட்டல், தேர்தல் களத்தில் அதிமுகவின் கரத்தை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

இது குறிப்பாக, ‘தேசிய உரிமைகள் களம் நுகர்வோர் அமைப்பு’ மற்றும் ‘தமிழ்நாடு சக்தி கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்க கூட்டமைப்பினர்’ தங்களது ஆதரவுக் கடிதத்தைப் பொதுச்செயலாளரிடம் வழங்கினர்.

இதனால் நுகர்வோர் நலன் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் இந்த அமைப்புகள், அதிமுகவின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் மீது நம்பிக்கை கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கு முன்பாகக் கிடைத்துள்ள இத்தகைய மக்கள் அமைப்புகளின் ஆதரவு, அதிமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.