சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்றுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசு மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நகராட்சி நிர்வாகத் துறையில் மட்டும் சுமார் 2,300 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், 888 கோடி ரூபாய் லஞ்சப் புகாரில் அமைச்சர் கே.என்.நேரு மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அமலாக்கத் துறை ஏற்கனவே போதிய ஆதாரங்களுடன் கடிதம் அனுப்பியும், இவ்வளவு காலம் முதல்வர் ஸ்டாலின் மௌனம் காத்தது ஏன் என்றும், தற்போது நீதிமன்றமே உத்தரவிட்டுள்ள நிலையில் அவர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்றும் அண்ணாமலை பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
