திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியின் முக்கியப் பதவியான பொதுச்செயலாளர் பொறுப்பினை கூடுதல் பொறுப்பாக கனிமொழி எம்.பி அல்லது டி.ஆர். பாலுவுக்கு வழங்க அக்கட்சியின் தலைமை ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் (வயது 85+), வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி அவர் தனது இல்லத்தில் எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்ததார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று துரைமுருகனின் உடல்நலம் குறித்து விசாரித்ததுடன், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

துரைமுருகன் முழுமையாகக் குணமடைந்து பணிக்குத் திரும்பக் கூடுதல் காலம் தேவைப்படலாம் என்பதால், கட்சியின் நிர்வாகப் பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருக்கப் பொதுச்செயலாளர் பொறுப்பினை தற்காலிகமாகவோ அல்லது கூடுதல் பொறுப்பாகவோ மற்றொரு மூத்த தலைவரிடம் ஒப்படைக்கத் தலைமை திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அல்லது கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கனிமொழிக்குக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டால், அது கட்சியில் அவரது முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இறுதி முடிவைப் பொறுத்தே அமையும்.