ஒடிசா மாநிலம் கரன்ஜியா அருகே உள்ள மிலு கிராமத்தைச் சேர்ந்த மால்டே சோரன் – லிலி சோரன் தம்பதி, வழக்கம் போல காட்டிற்கு இலைகளைச் சேகரிக்கச் சென்றுள்ளனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் அவர்கள் வேலையில் மூழ்கியிருந்தபோது, திடீரென 6 கரடிகள் கொண்ட கூட்டம் அவர்களைச் சூழ்ந்து கொண்டது.

இதில் ஒரு ஆக்ரோஷமான கரடி, மின்னல் வேகத்தில் மால்டே சோரன் மீது பாய்ந்து அவரைப் பதம் பார்த்தது. தனது கண் முன்னே கணவனை கரடி கடித்துக் குதறுவதைக் கண்ட மனைவி லிலி, அஞ்சி ஓடாமல் ‘காளி’யாக மாறினார்.

கையில் இருந்த கோடரியால் கரடியை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார். பெண்ணின் இந்த அசுர வேகத் தாக்குதலைச் சற்றும் எதிர்பாராத கரடிகள் மிரண்டு போய் காட்டை விட்டு ஓட்டம் பிடித்தன.

பலத்த காயமடைந்த கணவரை மீட்ட லிலி சோரன், அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். யானைத் தாக்குதலுக்குப் பிறகு இப்போது கரடிக்கூட்டம் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யத் தொடங்கியிருப்பது ஒடிசா மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது.