கர்நாடக மாநிலம் ஹம்பியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இஸ்ரேலிய பெண் சுற்றுலா பயணி மற்றும் தங்கும் விடுதி உரிமையாளரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, ஒடிசாவைச் சேர்ந்த இளைஞரை கால்வாயில் தள்ளிக் கொலை செய்த வழக்கில் மூன்று பேருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் 6ம் தேதி மாலை, துங்கபத்ரா கால்வாய் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ஐந்து சுற்றுலா பயணிகளிடம் மலேஷ், சாய், சரணப்பா ஆகிய 3 பேர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். சுற்றுலா பயணிகள் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், மூன்று ஆண்களையும் கால்வாய்க்குள் தள்ளிவிட்டுள்ளது.
இதில் ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், மற்ற இருவரும் நீந்தி கரை சேர்ந்தனர். பின்னர் அந்த கும்பல் இஸ்ரேலிய பெண் மற்றும் விடுதி உரிமையாளரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடியது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், தலைமறைவாக இருந்த மூன்று குற்றவாளிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு கொப்பள் மாவட்டம் கங்காவதி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில், கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை உள்ளிட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.
இதையடுத்து, குற்றவாளிகளான மலேஷ், சாய் மற்றும் சரணப்பா ஆகிய மூவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்தது. பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூரக் குற்றங்களில் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
