பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில், தனது கள்ளக்காதலைத் தொடர்வதற்காகப் பெற்ற தாய் ஒருவரே தனது இரு குழந்தைகளையும் விஷம் கொடுத்துக் கொன்றதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு, அந்தப் பெண்ணின் 12 வயது மகள் திடீரென உயிரிழந்தார். அப்போது அவர் உடல்நலக்குறைவால் இறந்ததாகக் கருதிய உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், போலீசாருக்குத் தகவல் தெரிவிக்காமல் உடலைத் தகனம் செய்தனர். இதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு, அந்தப் பெண்ணின் 7 வயது மகன் ஃபதேவீர் என்பவரும் அதே போன்ற மர்மமான முறையில் உயிரிழந்தார். அடுத்தடுத்து இரு குழந்தைகள் உயிரிழந்தது கிராம மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

சனிக்கிழமை காலை, கிராம ஊராட்சித் தலைவர்  மற்றும் பொதுமக்கள் காவல் நிலையத்தை அணுகித் தங்களது சந்தேகத்தைப் புகாராக அளித்தனர். அந்தப் பெண்ணிற்குத் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், அதற்கு இடையூறாக இருந்ததால் எலி மருந்து (விஷம்) கொடுத்துக் குழந்தைகளைக் கொன்றிருக்கலாம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

கிராம மக்களின் புகாரின் அடிப்படையில், உயிரிழந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றிய போலீசார், அந்தப் பெண்ணின் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 15 நாட்களுக்கு முன்பு உயிரிழந்த மகளின் மரணத்திலும் இதே முறையைப் பின்பற்றியுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சதியில் அந்தப் பெண்ணின் கள்ளக்காதலனுக்குப் பங்கு உண்டா என்பது குறித்தும் போலீசார் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பிஞ்சுயிர்கள் அடுத்தடுத்துப் பறிபோன சம்பவம் பஞ்சாப் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.