கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ‘விஷன் 2031’ சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், ஆளும் இடதுசாரி அரசைப் வெகுவாகப் புகழ்ந்து பேசியது அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், முதலமைச்சர் பினராயி விஜயன் முன்னிலையிலேயே பேசிய அவர், 2026 தேர்தலிலும் பினராயி விஜயனே மீண்டும் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்படுவார் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும், காந்திஜி கனவு கண்ட அதிகாரப் பரவலாக்கல் மற்றும் பஞ்சாயத்து ராஜ் முறையை காங்கிரஸ் அரசுகளை விடவும் கம்யூனிஸ்ட் அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாக அவர் பாராட்டியது காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
மணிசங்கர் அய்யரின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் தலைமை உடனடியாக மறுப்புத் தெரிவித்துள்ளதோடு, இது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் இதற்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது. கேரளாவில் பத்து ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர காங்கிரஸ் தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரே பினராயி விஜயன் மீண்டும் வெற்றி பெறுவார் எனக் கூறியது தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், கேரளாவின் உள்ளாட்சி நிர்வாக முறையை இந்தியாவிலேயே முதன்மையானதாக மாற்ற சட்டத்திருத்தங்கள் தேவை எனத் தெரிவித்த மணிசங்கர் அய்யர், காங்கிரஸ் கைவிட்ட அந்தப் பொறுப்பை பினராயி விஜயன் கையில் எடுக்க வேண்டும் என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
