தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் 2015 முதல் 2022 வரையிலான சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ‘அசுரன்’ படத்தின் ‘எள்ளு வயல் பூக்களையே’ பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகி விருது சைந்தவிக்கு அறிவிக்கப்பட்டது. அவர் வராததால், அவரது தாயார் விருதைப் பெற மேடை ஏறினார்.

அப்போது அவர் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறியபோது, அருகில் இருந்த நடிகை சாய் பல்லவியும் இயக்குநர் பார்த்திபனும் உடனடியாக ஓடிச்சென்று அவரைத் தாங்கிப் பிடித்தனர். இந்த நெகிழ்ச்சியான வீடியோவை சைந்தவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர, சாய் பல்லவி மற்றும் பார்த்திபனின் மனிதாபிமானத்தை ரசிகர்கள் பாராட்டித் தள்ளி வருகின்றனர்.

அதேபோல் இவ்விழாவில் சில சுவாரஸ்யமான மற்றும் வேடிக்கையான நிகழ்வுகளும் அரங்கேறின. நடிகர் சூர்யாவுக்கு வழங்கப்பட்ட விருதில், தவறுதலாக ஏ.ஆர். ரகுமானுக்குரிய ‘சிறந்த இசையமைப்பாளர்’ என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இதைச் சூர்யா ரகுமானிடம் காட்ட, இருவரும் அந்தச் சூழலைச் சிரிப்புடன் கையாண்டது அங்கிருந்தவர்களைக் கவர்ந்தது.

இந்த விருது வழங்கும் விழா நீண்ட காலத்திற்குப் பிறகு நடந்ததால் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.