அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் மகளிருக்கு 5 ஆயிரம் மட்டுமில்லை, 50 ஆயிரம் கொடுத்தாலும் திமுக தோல்வியடையப் போவது உறுதி என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் தோல்வி பயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எத்தனை அறிவிப்புகளை வெளியிட்டாலும், அது தமிழக மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது என அவர் விமர்சித்துள்ளார். பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான முன்பணம் மற்றும் முன்னெப்போதும் இல்லாத வகையில் ‘கோடைக்கால சிறப்புத் தொகை’ என 5,000 ரூபாய் வழங்குவது திட்டமிட்ட தேர்தல் நாடகம் என்று அவர் சாடியுள்ளார்.
மேலும் அவர் தனது அறிக்கையில், “2021 தேர்தலின் போது அனைத்து மகளிருக்கும் 1,000 ரூபாய் என்று கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு கட்டுப்பாடுகளை விதித்து ஏமாற்றியது திமுக. இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2,000 ரூபாய் தருவோம் என்று கூறுவது பெண்களை முட்டாளாக்கும் செயல். 25,000 ரூபாய்க்கும் மேல் நிலுவைத் தொகையை அமுக்கிவிட்டு, இப்போது அவசர கதியில் பணத்தைச் செலுத்துவது தேர்தல் ஆணைய கெடுபிடிகளுக்குப் பயந்துதான். பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெறத் துடிக்கும் திமுகவுக்கு, வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என்று ஆவேசமாகத் குறிப்பிட்டுள்ளார்.
