இந்தியாவின் மிகச்சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் திருவுருவப்படம் வரையப்பட்ட சுவற்றில், நபர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், ‘பைக்ர்ஸ் ஆஃப் பீகார்’ (Bikers of Bihar) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதலில் பதிவிடப்பட்டது. அந்த வீடியோவில், சுவற்றில் நேதாஜியின் படம் இருப்பதைக்கூடப் பொருட்படுத்தாமல் ஒருவர் சிறுநீர் கழிக்கிறார்.

இதைப் பார்த்த அங்கிருந்த மற்றொரு நபர், “யாரோட படத்துல என்ன பண்றீங்கன்னு தெரியுதா?” என்று தட்டிக்கேட்கிறார். ஆனால், அந்த நபர் மிகவும் அலட்சியமாக, “நான் கவனிக்கல” என்று கூறிவிட்டு எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அங்கிருந்து நடந்து செல்கிறார். ​”இரத்தத்தைக் கொடுங்கள், சுதந்திரத்தைத் தருகிறேன்” என்று முழங்கிய ஒரு மாபெரும் தலைவருக்கு இழைக்கப்பட்ட இந்த அநாகரீகச் செயல், தேசப்பற்றுள்ள இளைஞர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.

பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும், ஒரு தேசியத் தலைவரை இப்படி இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும், அந்த நபர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எக்ஸ் (X) தளம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. நமது நாட்டின் அடையாளங்களையும், தலைவர்களையும் மதிக்கத் தெரியாத இது போன்ற நபர்களால் இந்தியாவின் பொது ஒழுக்கம் கேள்விக்குறியாவதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.