உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த சந்தியா பரத்வாஜ் என்ற பெண் காவலர், தான் பாதுகாப்புப் பணிக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற அங்கித் சவுகான் என்ற ரவுடியுடன் காதலில் விழுந்துள்ளார்.

அங்கித் மீது பல திருட்டு வழக்குகள் உள்ள நிலையில், சமீபத்தில் அவர் ஒரு கொள்ளை வழக்கில் சிறைக்குச் சென்றார்.

இதற்கிடையே, சந்தியாவின் பெற்றோர் அவருக்கு அதுல் சர்மா என்ற போலீஸ்காரருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து, திருமண ஏற்பாடுகளையும் தீவிரமாக கவனித்து வந்தனர்.

திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்த அங்கித் சவுகானுடன் சந்தியா திடீரென வீட்டை விட்டு வெளியேறினார்.

மகளைக் காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இறுதியில், பக்சர் நகரில் காதலனுடன் இருந்த சந்தியாவைக் கண்டுபிடித்த போலீஸார், அங்கித் ஒரு குற்றவாளி என்பதால் அவரைப் பிரிந்து வருமாறு அறிவுரை வழங்கினர்.

ஆனால், சந்தியா போலீஸாரின் பேச்சை கேட்க மறுத்து, அங்கித் மீது எத்தனை வழக்குகள் இருந்தாலும் அவரையே திருமணம் செய்து கொள்வேன் என்பதில் உறுதியாக இருந்தார்.

காதலனைப் பிரிய முடியாது என அவர் பிடிவாதமாகத் தெரிவித்ததால், போலீஸ்காரருடன் நடக்கவிருந்த அவரது திருமணம் நின்றது.

ஒரு பெண் காவலர் கைதி ஒருவரை காதலித்துத் திருமணத்தை நிறுத்திய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.