2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கப்போவதாக பாகிஸ்தான் அறிவித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்துக் கருத்து தெரிவித்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசேன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பிசிசிஐ-யின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அனைத்து நாடுகளையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் விமர்சித்திருந்தார்.
அவரது இந்தப் பேச்சிற்குப் பதிலடி கொடுத்துள்ள இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், 2003 உலகக்கோப்பை தொடரின் போது ஜிம்பாப்வே மற்றும் கென்யாவிற்குச் செல்ல மறுத்து இங்கிலாந்து தொடரிலிருந்து விலகியதைச் சுட்டிக்காட்டி நாசர் உசேனை கடுமையாகச் சாடியுள்ளார்.
அப்போது இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தியதால் அவர்கள் ஒரு விதியை வைத்திருந்ததாகவும், தற்போது இந்திய ரசிகர்களிடமிருந்து அதிக வருவாய் வருவதால் ஐசிசி-யில் இந்தியா ஒரு படி மேலே இருப்பது இயல்பானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், ஐசிசி தூதுக்குழு நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு பாகிஸ்தான் அரசு தனது முடிவை மாற்றிக்கொண்டு இந்தியாவுடன் விளையாடச் சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்த முடிவை வரவேற்றுள்ள ஸ்ரீகாந்த், பாகிஸ்தான் விளையாடாமல் போயிருந்தால் அவர்களுக்குத்தான் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கும் என்றும், பல ரசிகர்கள் டிக்கெட்டுகளை ஏற்கனவே வாங்கியுள்ள நிலையில் போட்டி நடப்பது உலக கிரிக்கெட்டிற்கு மிகவும் முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளார்.
துணைக் கண்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்திற்கு இருக்கும் மிரட்டலான வரவேற்பையும், அதன் மூலம் கிடைக்கும் ஒளிபரப்பு வருவாயையும் யாராலும் புறக்கணிக்க முடியாது என்று அவர் தனது யூடியூப் தளத்தில் பேசியுள்ளார். வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்த ஆட்டம் உலகக்கோப்பை தொடரின் மிக முக்கியமான போட்டியாகப் பார்க்கப்படுகிறது.
