சேலத்தில் வரும் பிப்ரவரி 13-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்திற்கு காவல்துறையினர் 51 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காகப் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள திடலில் 5,000 நிர்வாகிகள் மட்டும் பங்கேற்கும் வகையில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் விஜய் தனது பிரச்சார வேனில் இருந்தபடி உரையாற்ற உள்ளார். இதில் பங்கேற்பவர்களுக்குத் தனியாக இருக்கைகள் வழங்கப்படாது என்றும், அனைவரும் டோக்கன் அடிப்படையில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தை முறைப்படுத்துவதற்காக 850 தன்னார்வலர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் பாதுகாப்பு கருதியும் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்கள் நேரில் வருவதைத் தவிர்த்துவிட்டு, தொலைக்காட்சியில் நிகழ்ச்சியைக் காணுமாறு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பகல் 12 மணி முதல் 3 மணி வரை மட்டுமே நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளைப் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
