மத்தியப் பிரதேச மாநிலம் முரைனா மாவட்டம் கைலாரஸ் காவல் நிலையத்தில், பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த நபருக்குப் பதிலாக அவரது 73 வயது தாத்தாவைப் பிடித்துச் சென்று போலீசார் சித்ரவதை செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதியன்று, பாலியல் வழக்கில் தலைமறைவாக இருந்த அருண் தாக்கர் என்பவரைத் தேடிச் சென்ற போலீசார், அவர் வீட்டில் இல்லாததால் எவ்வித வாரண்ட்டும் இன்றி அவரது தாத்தா கோபால் தாக்கரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
காவல் நிலையத்தில் சுமார் ஐந்து மணி நேரம் அடைத்து வைக்கப்பட்ட அவருக்கு முறையான மருந்து மற்றும் தண்ணீர் கூட வழங்கப்படாமல் போலீசார் அவமரியாதை செய்ததாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்துக் கேள்வி கேட்கச் சென்ற குவாலியர் உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர் அல்பனா சிகர்வாரை, அங்கிருந்த காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் யாதவ் ஒருமையில் பேசி மிரட்டியதுடன், அவரையும் கைது செய்யப்போவதாக எச்சரித்துள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், போலீசாரின் இந்த அராஜகப் போக்கிற்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள அருணைப் பிடிக்கவே அவரது தாத்தாவிடம் விசாரணை நடத்தியதாகக் காவல் துறையினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேசக் காவல் துறையின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
