சென்னை பெரம்பூர் பகுதியில் குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி, இளம் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட ஓய்வுபெற்ற நீதிமன்ற உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூரைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர், நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்ற அடிப்படையில் பலருக்கு சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், குடும்பப் பிரச்சினை தொடர்பாக உதவி கோரிய இளம் பெண் ஒருவரைப் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு சென்னை எழும்பூரில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு அவர் வரவழைத்துள்ளார். அங்கு அந்தப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து, அத்துமீறலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த ஞானப்பிரகாசத்தைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நீதிமன்றத்தில் பணியாற்றிய ஒருவரே, உதவி கேட்டு வந்த பெண்ணிடம் இத்தகைய கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டது சமூக வலைதளங்களிலும் அப்பகுதியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இது போன்ற புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
