பஞ்சாப் மாநிலம் மோகா பகுதியில் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் இரண்டு தொழிலாளர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் நிலையில், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று லடி பல்வான் மற்றும் நிர்வதி சிங் என்ற இரண்டு நபர்கள் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

“வெளிமாநில தொழிலாளர்கள் சீக்கிய மதக் கோட்பாடுகளை மதிக்கவில்லை” எனக் குற்றம் சாட்டி இந்த வன்முறையை அவர்கள் அரங்கேற்றியுள்ளனர்.

இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள ஷிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், ஆம் ஆத்மி அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“பஞ்சாப்பில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கேங்ஸ்டர் ராஜ்ஜியம் நடக்கிறது; மாநிலத்தை சீர்குலைக்க பெரிய சதி நடக்கிறது” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முதல்வர் பகவந்த் மான் டெல்லியின் ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் செயல்படுவதாகச் சாடிய பாதல், உடனடியாக வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.