மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தின் குற்றப்பிரிவு பெண் ஆய்வாளராகப் பொறுப்பேற்றுள்ள கிரேசி சோபியா, தனது காவல் எல்லைக்குட்பட்ட பெண்களின் பாதுகாப்புக்காக வெளியிட்டுள்ள ஒரு வாட்ஸ்அப் ஆடியோ இப்போது மதுரையில் செம்ம ட்ரெண்டிங். தங்கம் விலை ஒரு பவுன் ரூ. 1 லட்சத்தைத் தாண்டி விற்பனையாவதால், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பெண்களைக் குறிவைத்து நடக்கும் நகைப்பறிப்பு சம்பவங்களைத் தடுக்க அவர் இந்த விழிப்புணர்வு முயற்சியைக் கையில் எடுத்துள்ளார். “முக்கியமான நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் பெண்கள் தங்க நகைகளை அணிவதைத் தவிர்த்து, கவரிங் நகைகள் அல்லது பாசிகளை அணிந்து கொள்ளலாம்” என்று அவர் கொடுத்த எதார்த்தமான யோசனை பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

​மேலும் அந்த ஆடியோவில், நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனங்களில் வரும் கொள்ளையர்கள், அதிகாலையில் வாசலில் கோலமிடும் பெண்கள் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களைக் குறிவைப்பதாக எச்சரித்துள்ளார். “வெளியூர் சென்றால் நகைகளை வங்கி லாக்கரில் வையுங்கள், கடைக்காரர்கள் கல்லாப்பெட்டியில் பணத்தை வைத்துச் செல்லாதீர்கள்” என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். சிசிடிவி கேமராக்கள் மரங்களால் மறைக்கப்படுவதையும், அவை முறையாகச் செயல்படாததையும் சுட்டிக்காட்டிய அவர், சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாடினால் உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். காவல் துறையினரின் இந்த அதிரடி விழிப்புணர்வுப் பணி மதுரை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.