2026 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. ஒருபுறம் இந்தியாவைப் புறக்கணிப்பதாகக் கூறிவிட்டு, பின்னர் விளையாடச் சம்மதித்ததால் கேலிக்குள்ளான அந்அணி, மறுபுறம் மைதானத்தில் தனது மோசமான ஆட்டத்தால் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. நெதர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெறவே அந்த அணி கடுமையாகப் போராட வேண்டியிருந்தது.

கடந்த 2024 உலகக் கோப்பை தொடரில், கத்துக்குட்டி அணியாகக் கருதப்பட்ட அமெரிக்காவிடம் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவி வெளியேறியது. அந்த வடு இன்னும் ஆறாத நிலையில், நாளை மீண்டும் இரு அணிகளும் மோதவுள்ளன. இதுகுறித்து அமெரிக்க கேப்டன் முகமது மோசின் (இவர் பாகிஸ்தானில் பிறந்து, அங்கு முதல்தர கிரிக்கெட் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது) கூறியதாவது, “கடந்த முறை நாங்கள் பாகிஸ்தானை வீழ்த்திவிட்டோம்.

எனவே, நாளை நடைபெறவுள்ள போட்டியில் முழு நெருக்கடியும் அவர்கள் பக்கமே இருக்கும். இந்த உலகக் கோப்பையில் நாங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை. எங்கள் பயணத்தை நாங்கள் ரசித்து வருகிறோம். நாளை இன்னும் பெரிய ரன் வித்தியாசத்தில் அவர்களைத் தோற்கடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

இந்தியாவுக்கு எதிரான கடந்த போட்டியில் தோல்வியடைந்தது குறித்துப் பேசிய அவர், “அந்தத் தோல்வி கடினமானதுதான். ஆனால், அந்தப் போட்டியின் மூலம் எங்களது பந்துவீச்சாளர்களுக்கு அதிகத் தன்னம்பிக்கை கிடைத்துள்ளது. பேட்டிங் எங்களது பலம், இப்போது பந்துவீச்சும் வலுவடைந்து வருவதால் வரும் போட்டிகளில் அமெரிக்காவின் விஸ்வரூபத்தைப் பார்ப்பீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பாகிஸ்தான் அணி தனது மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடுமா அல்லது அமெரிக்கா மீண்டும் ஒரு வரலாற்று வெற்றியைப் பதிவு செய்யுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.