அண்டார்டிகாவின் டெய்லர் கிளேசியர் பகுதியில் பனிப்பாறைகளுக்கு இடையே ரத்தம் போன்ற சிவப்பு நிறத்தில் தண்ணீர் கொட்டும் ரத்த நீர்வீழ்ச்சி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

ஐந்து அடுக்கு மாடி உயரமுள்ள இந்தப் பனிப்பாறையின் அடியில் சுமார் இருபது லட்சம் ஆண்டுகளாக நிலப்பரப்பில் இருந்து துண்டிக்கப்பட்ட ஒரு ஏரி அமைந்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும். சூரிய ஒளி மற்றும் ஆக்சிஜன் ஊடுருவ முடியாத அந்த ஏரியின் நீர் வழக்கத்தை விட அதிக உப்புத்தன்மை கொண்டதாக இருப்பதால், அண்டார்டிகாவின் உறைநிலையிலும் அது உறையாமல் திரவ நிலையிலேயே காணப்படுகிறது.

பனிப்பாறையின் வெடிப்புகள் வழியாக இந்த நீர் வெளியே வரும்போது காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வினைபுரிந்து அதில் உள்ள இரும்பு தாதுக்கள் துருப்பிடிப்பது போன்ற வேதிமாற்றத்தை அடைகின்றன. இதன் விளைவாகவே வெண்மையான பனிப்பாறையில் ரத்தம் வழிவது போன்ற அடர் சிவப்பு நிறத் தோற்றம் உருவாகிறது என்று ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.

கடந்த 1911-ஆம் ஆண்டு தாமஸ் கிரிபித் டெய்லர் என்பவரால் கண்டறியப்பட்ட இந்த நீர்வீழ்ச்சி, தற்போது இணையதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.