இந்திய நாடாளுமன்ற வளாகம் மற்றும் தலைநகர் டெல்லியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது நாடாளுமன்றச் செயலகத்திற்கு வந்த மின்னஞ்சலில், வளாகத்திற்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த மிரட்டல் ‘காலிஸ்தான் தேசிய படை என்ற பெயரில் அனுப்பப்பட்டிருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிரட்டல் வந்த சில நிமிடங்களிலேயே நாடாளுமன்ற பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டனர். மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் அனைத்து அறைகள், நுழைவாயில்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அணு அணுவாகத் தீவிர சோதனை நடத்தப்பட்டது. எவ்வித வெடிபொருட்களும் கண்டெடுக்கப்படாத நிலையில், இது ஒரு வதந்தியாக இருக்கலாம் எனத் தோன்றினாலும், பாதுகாப்புப் படையினர் எவ்வித ரிஸ்க்கும் எடுக்காமல் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்ற மிரட்டல் ஒருபுறம் இருக்க, டெல்லியின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னணிப் பள்ளிகளுக்கும் இதே போன்ற மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்துள்ளன. இதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவியது. மிரட்டல் வந்த பள்ளிகளிலிருந்து மாணவர்கள் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பள்ளி வளாகங்களில் போலீஸார் பலத்த சோதனைகளை மேற்கொண்டனர்.

தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட இந்த மிரட்டல் மின்னஞ்சல்களின் ஐ.பி. (IP Address) முகவரியை வைத்து சைபர் க்ரைம் காவல்துறையினர் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். “பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தவும், அமைதியைக் குலைக்கவும் இது போன்ற போலி மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருக்கலாம். மிரட்டல் விடுத்த நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என டெல்லி காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.