அமெரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஹர்மீத் சிங், 2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியதைத் தொடர்ந்து, அவரது பழைய சர்ச்சைக்குரிய சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், மும்பையின் அந்தேரி ரயில் நிலைய நடைமேடையில் தனது சொகுசு காரை ஓட்டிச் சென்றதாக ஹர்மீத் சிங் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
மேலும் அதிகாலை நேரத்தில் பரபரப்பாக இருந்த பிளாட்பாரத்திற்குள் கார் நுழைந்ததைக் கண்டு பயணிகள் அச்சமடைந்து சிதறி ஓடினர் நல்லவேளையாக விபத்து ஏதும் நிகழவில்லை. தான் தவறுதலாக வழிமாறி வந்துவிட்டதாக அவர் அப்போது விளக்கமளித்த போதிலும், பயணிகள் உயிருக்கு ஆபத்து விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தியாவின் 2012-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த ஹர்மீத் சிங், ஒரு காலத்தில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் இயன் சேப்பலால் “அடுத்த பிஷன் சிங் பேடி” என்று புகழப்பட்டவர். இருப்பினும், 2013 ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கி பின்னர் விடுவிக்கப்பட்டது மற்றும் இந்த ரயில் நிலைய கார் விபத்து போன்ற சம்பவங்கள் அவரது இந்திய கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தின.
இந்நிலையில் இந்தியாவில் போதிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், மனம் தளராமல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த அவர், தற்போது அந்நாட்டு தேசிய அணியின் முதுகெலும்பாக உருவெடுத்துள்ளார். பல சவால்களைக் கடந்து இன்று உலகமே உற்றுநோக்கும் ஒரு வீரராக அவர் விஸ்வரூபம் எடுத்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
