விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “திமுக என்றால் பிரம்மாண்டம், இளைஞரணி என்றால் அதைவிடப் பிரம்மாண்டம்” எனத் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

மாநில உரிமைகளைத் தட்டிப்பறிக்க நினைக்கும் பாஜகவால் தமிழ்நாட்டைத் தொடக்கூட முடியாது என்றும், வரும் தேர்தலில் திமுக 7-வது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தமிழக அரசு செயல்படுத்தி வரும் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் போன்ற திட்டங்களால் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாகத் திகழ்வதாகப் பெருமிதம் கொண்டார்.

அதே சமயம், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்குப் பூஜ்ஜியமே மிஞ்சியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், மத்திய அரசு நமக்கு ‘ஜீரோ’ கொடுத்தால் நாமும் தேர்தலில் அவர்களுக்கு ‘ஜீரோ’ தான் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், எடப்பாடி பழனிசாமி தற்போது பாஜகவின் கிளைச் செயலாளர் போலச் செயல்படுவதாகவும் அவர் விமர்சித்தார். குறிப்பாக, வரும் சட்டமன்றத் தேர்தல் என்பது “தமிழ்நாடு vs என்.டி.ஏ” இடையிலான போட்டி என்று முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக அறிவித்தார்.

திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி என்று விஜய் தொடர்ந்து பேசி வரும் நிலையில், அவரைப் பற்றி எதையும் குறிப்பிடாமல், தனது நேரடிப் போட்டி பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிதான் என்பதை முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன் மூலம் விஜய்யை ‘லெஃப்ட் ஹேண்டில்’ டீல் செய்து, தனது அரசியல் இலக்கு தேசிய அளவிலான சக்திகளே என்பதை அவர் உணர்த்தியுள்ளார்.