மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டம் சின்சகாரி பகுதியில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில், விளையாடிக்கொண்டிருந்த வீரர் ஒருவர் மாரடைப்பால் மைதானத்திலேயே உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் உலகைத் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஸ்வராஜ் பிரதிஷ்டான் மற்றும் கொங்கன் நகர் அணிகளுக்கு இடையே நடந்த இந்தப் போட்டியின் போது, பிரவீன் பவார் என்ற வீரர் நான்-ஸ்டிரைக்கர் முனையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது பந்துவீச்சாளர் பந்து வீசிவிட்டுத் திரும்பிய சில நொடிகளிலேயே, பிரவீன் எதிர்பாராத விதமாக மைதானத்தில் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த சக வீரர்களும் நடுவர்களும் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்து அவருக்கு முதலுதவி செய்தும் எந்தப் பயனும் இல்லை. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். பிரவீனுக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பே இந்த மரணத்திற்கு முதன்மைக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்ட பிரவீன், அந்தப் பகுதியில் திறமையான வீரராக அறியப்பட்டவர். தான் நேசித்த விளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கும் போதே அவரது உயிர் பிரிந்தது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. அண்மைக்காலமாக உடற்பயிற்சி செய்யும் போதும், விளையாடும் போதும் இளைஞர்களுக்கு ஏற்படும் இந்தத் திடீர் மாரடைப்பு மரணங்கள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.