சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் ஒரு காணொளியில், பெண் ஒருவர் தனது விரலை வைத்தே சமையல் எரிவாயு அடுப்பைப் பற்றவைக்கும் காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எவ்வித தீப்பெட்டி அல்லது லைட்டர் உபகரணமும் இன்றி அவர் இந்தச் செயலைச் செய்வது பார்ப்பதற்கு மந்திரம் போல் தோன்றினாலும், இதன் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மையை ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.

 

ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கும் அந்தப் பெண்ணின் தலையை மற்றொரு நபர் துணியால் வேகமாகத் தேய்க்கும்போது, உராய்வின் காரணமாக அவரது உடலில் நிலைமின்சாரம் உருவாகிறது. இதனால் அவரது தலைமுடி சிலிர்த்து நிற்பதை காணொளியில் காண முடிகிறது.

அந்தச் சமயம் அவர் தனது விரலை எரிவாயு அடுப்பின் அருகே கொண்டு செல்லும்போது, உடலில் தேங்கியிருந்த மின்சாரம் ஒரு சிறிய மின்பொறியாக வெளிப்பட்டு அடுப்பை எரிய வைக்கிறது. இது பார்ப்பதற்குச் சுவாரசியமாக இருந்தாலும், இதில் பெரும் ஆபத்து ஒளிந்திருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

ட்ரைபோ எலக்ட்ரிக் விளைவு எனப்படும் இந்த அறிவியல் நிகழ்வின் மூலம் உருவாகும் மின்சாரம், எரிவாயுவின் மீது படும்போது எதிர்பாராத வெடிவிபத்துகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதைப் பார்த்த இணையவாசிகள் பலரும் மனித தீக்குச்சி என்றும், பெண் டெஸ்லா காயில் என்றும் வியந்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இருப்பினும், இத்தகைய சோதனைகளை வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ முயற்சி செய்வது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் இதனைப் பின்பற்ற வேண்டாம் என்று பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.