மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் வரும் தேர்தலில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டதாகத் தெரிவித்தார். திமுக அரசு அளித்த 525 வாக்குறுதிகளில் 70-ஐக்கூட நிறைவேற்றாமல், மத்திய அரசு மீது பொய்ப் பிரச்சாரம் செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அமல்படுத்தப்படும் பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற அறிவிப்புகளை எப்படி நிறைவேற்ற முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசிய அவர், “அதிமுகவை விமர்சிக்க விஜய்க்கு எந்தத் தகுதியும் இல்லை; அவர் இன்னும் ஒரு கவுன்சிலர் கூட ஆகவில்லை” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

வெறும் விசிலடித்துக் கொண்டிருந்தால் அரசியலில் எதுவும் நடந்துவிடாது என்றும், காங்கிரஸ் கட்சி விஜய்யுடன் கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தை நடத்தித் தோல்வியடைந்ததால் தான் தற்போது திமுகவுடன் ஒட்டிக்கொண்டிருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், ஒட்டுமொத்த மாநிலமே குப்பையாகக் கிடப்பதாகவும் நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்தார்.

வரும் பிப்ரவரி 28-ம் தேதி மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இதற்காக எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.