டெஸ்லா அறிமுகப்படுத்தி, பின் ஷாவோமி போன்ற நிறுவனங்கள் பின்பற்றிய ‘மறைக்கப்பட்ட’ கார் டோர் ஹேண்டில்களுக்கு (Hidden door handles) சீனா அதிரடி தடை விதித்துள்ளது. விபத்து காலங்களில் காரின் கதவுகளைத் திறக்க முடியாமல் உயிரிழப்புகள் ஏற்படுவதால், 2027 முதல் அனைத்து கார்களிலும் வெளியே துருத்திக் கொண்டிருக்கும் சாதாரண கைப்பிடிகள் கட்டாயம் இருக்க வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஷாவோமி கார் விபத்தின்போது, கதவைத் திறக்க முடியாமல் டிரைவர் தீயில் கருகி பலியான சம்பவம் இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

​புதிய விதிகளின்படி, காரின் உட்புறக் கைப்பிடிகள் தெளிவாகத் தெரிய வேண்டும் மற்றும் மின்சார உதவி இல்லாமல் மெக்கானிக்கல் முறையில் கதவைத் திறக்கும் வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும். 2027 ஜனவரி முதல் அறிமுகமாகும் புதிய மாடல்களுக்கு இந்த விதி பொருந்தும் என்றும், பழைய மாடல்கள் 2029-க்குள் மாற்றப்பட வேண்டும் என்றும் சீனா கெடு விதித்துள்ளது. டெஸ்லா கார்களில் ஏற்கனவே இது போன்ற பாதுகாப்பு கோளாறுகள் குறித்து அமெரிக்காவில் விசாரணை நடந்து வரும் நிலையில், சீனா எடுத்துள்ள இந்த முதல் கட்ட அதிரடி நடவடிக்கை உலக ஆட்டோமொபைல் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.