ஆஸ்திரேலியாவின் குயிண்டாலப் கடற்கரை பகுதியில் தனது தாய் மற்றும் தம்பி, தங்கையுடன் துடுப்புப் படகில் சென்ற 13 வயது சிறுவன் ஆஸ்டின் ஆப்பல்பீ, நடுக்கடலில் தத்தளித்த தனது குடும்பத்தினரை வீரத்துடன் காப்பாற்றிய சம்பவம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சுற்றுலா சென்றபோது வீசிய பலத்த காற்றினால் அவர்களது படகு கட்டுப்பாட்டை இழந்து நடுக்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த இக்கட்டான சூழலில் சற்றும் மனம் தளராத அந்தச் சிறுவன், ராட்சத அலைகளையும் சுறாக்கள் நடமாட்டம் மிகுந்த ஆபத்தான பகுதியையும் பொருட்படுத்தாமல் சுமார் 4 மணி நேரம் இடைவிடாமல் நீந்தி கரையை அடைந்தார்.
உடல் சோர்ந்து மயங்கும் நிலையிலும் கரையில் இருந்தவர்களிடம் தனது குடும்பத்தினர் கடலில் தத்தளிப்பது குறித்து அந்தச் சிறுவன் தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட மீட்புக் குழுவினர், ஹெலிகாப்டர் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தி நடுக்கடலில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சிறுவனின் தாய் மற்றும் குழந்தைகளைப் பத்திரமாக மீட்டனர்.
தனது உயிரைப் பணையம் வைத்து குடும்பத்தையே காப்பாற்றிய இந்தச் சிறுவனின் வீரத்தையும் மன உறுதியையும் பாராட்டி வரும் மக்கள், அவனை ஒரு அதிசயப் பிறவி என்று கொண்டாடி வருகின்றனர்.
