அதிர்ஷ்டம் கதவைத் தட்டினால் சாதாரண தயிர் வடை விற்பனையாளர் கூட கோடீஸ்வரர் ஆகலாம் என்பதற்கு டெல்லியைச் சேர்ந்த ஷர்மாஜி ஒரு சிறந்த உதாரணம். 1989-ஆம் ஆண்டு வெறும் 2 ரூபாய்க்குத் தயிர் வடை விற்கத் தொடங்கிய முகேஷ் குமார் ஷர்மா, இன்று டெல்லியின் நேரு பிளேஸ் பகுதியில் ‘கோடீஸ்வர தயிர் வடை விற்பனையாளர்’ என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

பல வருட உழைப்பிற்குப் பிறகு இன்று அவர் பல லட்சங்கள் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ (BMW) காரில் வந்து தனது நடமாடும் கடையை விரிப்பதுதான் டெல்லிவாசிகளின் தற்போதைய ஹாட் டாபிக். இவரிடம் கடை என்று தனியாக எதுவும் கிடையாது; தனது சொகுசு காரில் ஒரு சிறிய மேஜையை எடுத்து வந்து, அதில் வைத்துதான் வியாபாரத்தைத் தொடங்குகிறார்.

​இவருடைய தயிர் வடையின் ரகசியம் அவர் கையால் அரைக்கும் பிரத்யேக மசாலாக்களில் தான் ஒளிந்திருக்கிறது. தற்போது ஒரு பிளேட் 40 முதல் 50 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும், அதன் சுவைக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர். நேரு பிளேஸ் மார்க்கெட்டிற்கு வரும் எவரும் ஷர்மாஜியின் தயிர் வடையைச் சுவைக்காமல் திரும்புவதில்லை.

வீட்டிலிருந்தே தயார் செய்து கொண்டு வரும் வடைகளை, காரில் எடுத்து வரும் தயிர் மற்றும் மசாலாக்களுடன் கலந்து அவர் கொடுக்கும் அழகே தனி என்கிறார்கள் ரசிகர்கள். கையில் காசு இல்லாவிட்டாலும் உழைப்பும் கைராசியும் இருந்தால் பிஎம்டபிள்யூ காரில் கடை வைக்கலாம் என்பதை ஷர்மாஜி நிரூபித்துக் காட்டியுள்ளார்.