2026-ம் ஆண்டு நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில், இந்தியாவுக்கு எதிரான வாழ்வா சாவா போராட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. 253 ரன்கள் என்ற இலக்கை 33.3 ஓவர்களுக்குள் எட்டினால் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெற முடியும் என்ற நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் அதற்கான முயற்சியை மேற்கொள்ளாமல் நிதானமாக விளையாடி 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இந்த மந்தமான ஆட்டத்தை ஹர்ஷா போக்லே மற்றும் ஆகாஷ் சோப்ரா போன்ற வர்ணனையாளர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும், இந்த மேட்ச்சின் போது பாகிஸ்தான் அணியின் மேலாளராக இருக்கும் சர்பராஸ் அகமது, டிரஸ்ஸிங் ரூமில் அமர்ந்து செல்போன் பயன்படுத்தியது ஐசிசி-யின் ஊழல் தடுப்பு விதிகளை மீறுவதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

​இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) மற்றுமொரு அதிரடி முடிவை அறிவித்துள்ளது. வரும் பிப்ரவரி 15-ம் தேதி நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கப் போவதாகப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனால் இந்தியாவுக்கு இரண்டு புள்ளிகள் இலவசமாகக் கிடைக்கும் என்றாலும், பாகிஸ்தான் அணி லீக் சுற்றிலேயே வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சர்பராஸ் அகமது போன் பயன்படுத்தியது குறித்து ஐசிசி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், பாகிஸ்தான் அணியின் அடுத்தடுத்த முடிவுகள் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன.