குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள ஊனா பகுதியில், புதன்கிழமை இரவு இந்த அதிரடிச் சம்பவம் நடந்துள்ளது. 60 வயதான பாபுபாய் தனது வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தபோது, இருட்டிற்குள் மறைந்திருந்த ஒரு சிறுத்தை திடீரென அவர் மீது பாய்ந்து கழுத்தைப் பிடித்துள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த 27 வயது மகன் ஷர்துலை, அந்தச் சிறுத்தை வெறித்தனமாகத் தாக்கி தனது தாடைக்குள் கவ்விக்கொண்டது.
தன் கண் முன்னே மகன் உயிருக்குப் போராடுவதைக் கண்ட பாபுபாய், ஆவேசத்தின் உச்சத்துக்கே சென்றார். அருகில் கிடந்த வேல் கம்பு மற்றும் அரிவாளை எடுத்து அந்தச் சிறுத்தையை சரமாரியாகத் தாக்கி அங்கேயே அதைக் கொன்று வீழ்த்தினார். இந்தக் கொடூரமான சண்டையில் தந்தை, மகன் இருவருமே பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மகனைக் காப்பாற்ற சிறுத்தையையே கொன்ற தந்தையின் வீரத்தைப் பலரும் பாராட்டினாலும், வனவிலங்கைக் கொன்றதற்காக பாபுபாய் மற்றும் அவரது மகன் மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
