ஃபரிதாபாத் அருகே உள்ள சிக்ரி காலனியில், இரண்டு வயது சிறுவன் ஒருவனை அவனது மாற்றான் தந்தை அடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ரன்பீர் சிங் என்ற அந்த நபர், கடந்த ஜனவரி 25-ம் தேதி சிறுவனை தரையில் தூக்கிப் போட்டு கொடூரமாக தாக்கியுள்ளார்.
பின்னர், குழந்தை ஏணியிலிருந்து விழுந்துவிட்டதாகக் கூறி நாடகமாடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். குழந்தை உயிரிழந்த நிலையில், எதார்த்தமான விபத்து என்று கருதி இறுதிச் சடங்குகளும் முடிந்துவிட்டன.
ஆனால், யாரோ கொடுத்த ரகசிய தகவலின் பேரில் போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ரன்பீர் சிங் குழந்தையைக் கொன்றது அம்பலமானது.
விசாரணையில், தனது மனைவி காஜல் முந்தைய கணவரின் குழந்தையான இரண்டு வயது சிவான்ஷிடம் அதிக அன்பு காட்டியதும், தன்னிடம் சரியாக நேரம் ஒதுக்காததுமே இந்த கொலைக்குக் காரணம் என்று ரன்பீர் கூறியுள்ளார்.
தனது முதல் கணவர் பிரிந்து சென்ற நிலையில், மூன்று குழந்தைகளுடன் காஜல் கடந்த நவம்பர் மாதம் தான் ரன்பீரை இரண்டாவதாகத் திருமணம் செய்திருந்தார். தற்போது ரன்பீரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சமீபத்தில் ஒரு தந்தை தன் மகள் 1 முதல் 50 வரை எண்களை எழுதவில்லை என்பதற்காகத் தரையில் அடித்துக் கொன்ற சம்பவம் நடந்த நிலையில், தற்போது இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
