பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணையும் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கப்பட உள்ளது. புஷ்பா திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் அதே தயாரிப்பு நிறுவனத்துடன் அல்லு அர்ஜுன் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே சமூக வலைதளங்களில் இந்தப் படம் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. படத்தின் அறிவிப்பு வீடியோவில் இடம்பெற்றிருந்த தீம் இசையை மட்டும் பயன்படுத்தி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை மூன்று லட்சத்து ஐம்பத்தையாயிரத்திற்கும் மேற்பட்ட ரீல்ஸ் வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒரு திரைப்படத்தின் ஆரம்பக்கட்ட அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே இவ்வளவு அதிகமான ரீல்ஸ்கள் உருவாக்கப்பட்டது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் திரையுலகில் இந்தப் படம் இப்போதே கவனத்தை ஈர்த்துள்ளது.
