மாமல்லபுரம் கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுக மற்றும் அதிமுகவை “தீய சக்தி” மற்றும் “ஊழல் சக்தி” என நேரடியாகத் தாக்கினார். எந்தச் சூழ்ச்சிக்கும் அடிபணியாமல் மக்களைப் பாதுகாக்கவே அரசியலுக்கு வந்திருப்பதாக அவர் வீரவசனம் பேசினார்.

ஆனால், விஜய்யின் இந்தப் பேச்சுக்கு அதிமுக மற்றும் திரை விமர்சகர் புளூ சட்டை மாறன் ஆகியோர் மிகக்கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளனர். ஊழலைப் பற்றிப் பேசும் விஜய், தன் படங்களுக்குப் பல ஆண்டுகளாக பிளாக்கில் டிக்கெட் விற்கப்படுவதை ஏன் ஒருமுறை கூடத் தடுத்து நிறுத்தவில்லை என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதிமுக தரப்பில் பேசுகையில், தனது படம் வெளியாவதற்காக அதிகார மையத்திடம் மண்டியிட்டு நின்றதே ஒருவகை ஊழல்தான் என விஜய்யைச் சாடியுள்ளனர். அதேபோல் புளூ சட்டை மாறன், “ஊழலை வேடிக்கை பார்ப்பதும் ஊழல்தான்” என்று குறிப்பிட்டு, ‘எனது ரசிகர்கள் பிளாக்கில் டிக்கெட் வாங்கக் கூடாது’ எனச் சொல்லும் தைரியம் விஜய்க்கு இருக்கிறதா எனத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அரசியலில் ஊழலை ஒழிக்கப் போவதாகக் கூறும் விஜய், தன் சினிமா தொழிலில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டுகொள்ளாதது ஏன் என்ற விமர்சனம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.